Archives: நவம்பர் 2017

குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது

ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.

ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).

இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.

பிறர் உணர்வை நமதாக்கிக் கொள்ளுதலின் வல்லமை

R70i என்னும் ஆடை முதுமை எப்படியிருக்கும் என்பதை செயற்கையாகக் காட்டும் ஓர் வகை ஆடை. அதில் ஒரு விசேஷித்த தலைக்கவசம் உண்டு. அதிலுள்ள கண்ணாடிகள் அதை நீங்கள் அணிந்தவுடனேயே உங்கள் பார்வையை மங்கச் செய்யும். அதிலுள்ள ஒலிபெருக்கிகள் காதுகள் சரியாகக் கேட்க விடாது, நடமாட்டத்தையும் குறைத்து விடும். அந்த உடையைப் போட்டுக்கொண்டால் இன்னும் நாற்பது வருடங்களில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும். வயதானவர்களைப் பராமரிப்பவர்கள் முதியோரின் பலவீனங்களையும் பிரச்சனைகளையும் அனுபவிக்கச்செய்து, அதன்மூலம் வயதானவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட முடியும். பத்திரிக்கையாளர் “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” நிருபர் ஜெப்ரி ஃபவுலர் ஒருமுறை இதை அணிந்து பார்த்து விட்டு “முதிர் வயதடைவது என்பது மறக்கமுடியாததும், சில வேளைகளில் சோர்வுக்குள்ளாக்கும் அனுபவம் மட்டுமல்ல, இந்தக் கருவி (ஆடை) முதுமையின் உண்மைத் தன்மையையும் அவர்களின் உணர்வுகளை நமதாக்கிக் கொள்ளும் பண்பைக் கற்றுத்தந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகை வேறு கண்ணோட்டத்துடன் பாக்கச் செய்கிறது என்றார்.

ஒருவரது உணர்வுகளைஅறிந்து அவரோடு அதைப் பகிர்ந்துகொள்வது என்பது ஓர் திறமை. இயேசுவைப் பின் பற்றினவர்களுக்கு கொடுமையான உபத்திரவம் வந்தபொழுது, எபிரெய நிருப ஆக்கியோன், விசுவாசிகளை “கட்டப்பட்டவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள் போல அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்:” என்று எழுதினார் (13:3).

இதைத்தான் நமது இரட்சகர் நமக்குச் செய்தார். இயேசு நம்மைப் போல் மாறினார் “…எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் (எபி. 2:17-18).

நம்மைப்போன்ற மனிதனாக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாடுபடுகிறவர்களோடு, அவர்கள், பாடுபடுகையில் நாமும் பாடுபடுகிறவர்கள் போல அவர்களுடன் நிற்க நம்மை அழைக்கிறார்.

உண்மையிலேயே வேதாகமத்தை நாங்கள் நம்பலாமா?

இன்றைய நவீன உலகிலே, வேதாகமம் ஒரு அறிவற்ற பழைய புத்தகமே தவிர வேறொன்றுமில்லை என்றும், அது காலத்துக்குக் காலம் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட, தேவதைகள் பற்றிய கதைகள், சிறுவர் கதைகள் ஆகியவை சேர்ந்த ஒரு கட்டுக் கதையின் கலவை என்றும் பலர் நம்புகிறார்கள். வேதாகமம் மிகச் சரியானதும், நம்பக்கூடியதுமான புத்தகம் என்பதை நிரூபிப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?

நமது வல்லமையுள்ள தேவன்

ஒரு நாள் கடற்கரையில் நின்றுகொண்டு, கடலில் சறுக்குப்பலகைகளில், தங்கள் கைகளில் பாராசூட் போன்ற பட்டங்களைப் பிடித்துக்கொண்டு, காற்றினால் ஒவ்வொரு அலையாகத் தாண்டித்தாண்டி விளையாடியவர்களைக் கண்டு ரசித்தேன். கரைக்கு வந்த ஒருவனிடம், பெரிய பட்டத்தைப் பிடித்துக்கொண்டு சறுக்கும் அனுபவம் கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை, சறுக்குப்பலகைகளில் அலைகளைத் தாண்டுவதைவிட இது எளிதாக உள்ளது. ஏனென்றால், காற்றின் வலிமையைக் கட்டுப் படுத்துகிறேன்” என்றான்.

அதன் பின், சறுக்குபவர்களைத் தள்ளுவது மட்டுமன்றி, என் முடியையும் கலைத்து முகத்தில் அறைகிற காற்றின் வலிமையை நினைத்துக்கொண்டே கடற்கரையில் நடந்தேன். தீடீரென்று நின்று நமது வல்லமையுள்ள சிருஷ்டிகரை நினைத்து அதிசயித்தேன். ஆமோஸ் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி “தேவன் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றை சிருஷ்டித்தவரும் விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவருமாயிருக்கிறார்” (வச. 13)

இந்தத் தீர்க்கதரிசியின் மூலம், தேவன் தம்முடைய ஜனங்களைத் தம்மிடத்தில் திரும்பி வர அழைக்கும் பொழுது தம்முடைய வல்லமையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (வச. 13). அவர்கள் அவருக்குக் கீழ்படியாமற்போனாலும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறுகிறார். இந்த இடத்தில் அவருடைய நியாயாத்தீர்ப்பை அறிந்தாலும் வேதத்தின் மற்ற பகுதிகளில் தம்முடைய குமாரனை பலியாக அனுப்பின அவருடைய தியாகமான அன்பைக்குறித்து வாசிக்கிறோம் (யோவா. 3:16).

தெற்கு இங்கிலாந்து கடற்கரையில் வீசிய காற்றின் வலிமை தேவனுடைய மகத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இன்றைக்கு அப்படியொரு காற்று வீசுமானால் நாம் இன்று வல்லமையுள்ள தேவனை  ஏன் தியானிக்கக்கூடாது?

இன்னும் மேலாக அறிதல்

நாங்கள் ஒரு பையனை வெளிநாட்டிலிருந்து தத்தெடுத்து கடல் கடந்து எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபொழுது. அவனிடத்தில் அளவு கடந்த அன்பை பொழிந்து, கடந்த காலத்தில் அவன் அனுபவித்திராத விதவிதமான உணவுகளையும், அவனுக்குக் கொடுத்தோம். உணவு பற்றாக்குறையினால் அவனுக்கு ஒரு குறையிருந்தது. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களிடம் காட்டியும் அவன் வளர்ச்சியடையவில்லை. மூன்று வருடங்களுக்குப்பின் அவனுக்கு சில உணவுகள் ஒவ்வாமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட உணவுகளை விலக்கியவுடன், சில மாதங்களுக்குள் அவன் ஐந்து அங்குலம் வளர்ந்துவிட்டான். அவன் வளர்ச்சியை தடைசெய்த உணவுகளைத் தெரியாமல் கொடுத்ததற்காக வருந்தினாலும், அவனுடைய வளர்ச்சியினால் சந்தோஷப்பட்டோம்.

அநேக ஆண்டுகளாக ஆலயத்தில் காணாமற்போயிருந்த நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தவுடன் யோசியா ராஜாவும் என்னைப்போலவே சந்தோஷப்பட்டிருப்பான்; என்று நினைக்கிறேன். நான் அறியாமலேயே என் மகனின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் வேதனையுற்றது போல யோசியாவும், தன் அறியாமையினால், தேவன் தன் மக்களுக்காகக் கொண்ட மிகச்சிறந்ததும், பூரணமானதுமான விருப்பங்களை இழந்ததற்காக மனம் வருந்தினான் (2 இரா. 22:11). தேவனுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ததற்காக அவன் புகழப்பட்டாலும் (வச. 2), நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தபின் தேவனை எப்படி இன்னும் அதிகமாக கனம் பண்ணவேண்டுமென்று அறிந்துகொண்டான். இப்பொழுது புதிதாகப் பெற்ற அறிவினால் தேவன் கற்பித்தபடியே தேவனை ஆராதிக்க ஜனங்களை வழிநடத்தினான் (23:22-23).

வேதத்திலிருந்து தேவனை எவ்வாறு கனம் பண்ணவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் நாம் அவ்வாறே தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமற் போனதற்காக வருத்தப்படுவோம். ஆனாலும் அவர் நம்மை குணப்படுத்தி, திரும்ப உயிர்ப்பித்து, இன்னும் ஆழமாக அவரை அறிகிற அறிவிற்குள் நடத்துகிறபடியால் ஆறுதல் அடைய முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.